வன துர்கை - கதிராமங்கலம்
தினமும் காசிக்குப் போகும் #வனதுர்கை!
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ளது கதிராமங்கலம் திருத்தலம். மயிலாடுதுறையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவு.
இங்குதான் தனக்கென தனிக்கோயில் கொண்டு அருளாட்சி புரிகிறாள், அருள்மிகு வனதுர்கா #பரமேஸ்வரி. இந்த அம்பிகை அனுதினமும் காசிக்குச் சென்று வருவதாக ஐதீகம். அதற்குக் காரணம் ஒரு #முனிவர்!
வேதங்களே விருட்சங்களாக வளர்ந்து நின்று இறைவழிபாடு செய்த புண்ணியம்பதியாம் #வேதாரண்யம் திருத்தலத்தைத் தரிசிக்கச் சென்று கொண்டிருந்தார் அந்த முனிவர்.
அவர் செல்லும் வழியில், அசுரன் ஒருவன் மலை உருவில் நெடிதுயர்ந்து வளர்ந்து நின்று அவரை வழிமறித்தான். அவனை அழிக்கும் சக்தி வேண்டும் என்று துர்கா தேவியைப் பிரார்த்தித்து தவம் செய்தார் முனிவர்.
அவருடைய தவத்தால் மகிழ்ந்த துர்கை, முனிவருக்குக் காட்சி தந்தாள். அவர் வேண்டியபடியே அசுரனை அழிக்கும் சக்தியையும் வழங்கி அருள்பாலித்தாள். அசுரனை அழித்த முனிவர், தனக்குப் பேரருள் புரிந்த துர்கை அம்மனை அனுதினமும் வழிபட்டு வந்தார்.
நாட்கள் கழிந்தன. காசிக்குச் செல்ல விரும்பினார் முனிவர். ஆனால், காசிக்குச் சென்றுவிட்டால், துர்கையம்மனை வழிபட முடியாதே என கலங்கினார்.
அவருடைய கலக்கத்தை அகற்ற திருவுளம் கொண்ட துர்காதேவி, அனுதினமும் இரவுப் பொழுதில் காசிக்கு வந்து முனிவருக்குத் தரிசனம் தருவதாக திருவாக்கு தந்தாள். அதன்படியே, இன்றைக்கும் கோயில் கருவறை விதானத்தில் இருக்கும் துளை வழியே, தினமும் வனதுர்கா பரமேஸ்வரி அம்மன் காசிக்குச் சென்றுவருவதாக, சிலிர்ப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள்.
வனதுர்கையிடம் வரம் பெற்ற அந்த முனிவர் யார் தெரியுமா? அகத்தியர்தான் அவர்.
இந்த முனிவர் பெருந்தகை தனக்கு சக்தி தந்த அன்னையை, ‘வாழ்வளித்த அன்னை வனதுர்கா’ என்று போற்றினாராம்.
அதன் காரணம் தொட்டு, இந்த அம்பிகைக்கு வனதுர்கை என்று திருநாமம் ஏற்பட்டது என்கிறார்கள்.
இந்தத் திருத்தலத்துக்கு #கதிராமங்கலம் எனும் பெயர் ஏற்படவும் ஒரு காரணக் கதை உண்டு.
இவ்வூரின் அருகில் அமைந்திருக்கிறது தேரழுந்தூர். கம்பர் வசித்த ஊர் இது. அவரது இல்லத்தின் கூரை பழுதுபட்டிருந்தது. ஒரு மழைக் காலத்தின் இரவுப் பொழுதில், வனதுர்கையை மனதால் துதித்த கம்பர், அன்னையின் அருள் தன்னைக் காக்கவேண்டும் என்று பிரார்த்தனை விட்டு உறங்கிப்போனார்.
மறுநாள் காலையில், அவரது இல்லத்தின் கூரை நெற் செய்து கதிர்களால் வேயப்பட்டிருந்ததைக் கண்டு வியந்தார் கம்பர்.
இது அன்னை நிகழ்த்திய அற்புதமே என்று உணர்ந்தவர், வனதுர்கையை ‘#கதிர்தேவி’, ‘கதிர்வேந்த மங்கள நாயகி’ என்றெல்லாம் போற்றித் தொழுதார். இதையொட்டியே இந்த ஊருக்கும் கதிராமங்கலம் எனும் பெயர் வாய்த்ததாம்.
அகத்தியருக்கும் கம்பருக்கும் மட்டுமல்ல; இன்னொருவருக்கும் அருள்செய்திருக்கிறாள் இந்த அம்பிகை. அவர், மிருகண்டு மகரிஷி.
பதினாறு வயதில் தன் மகன் மார்க்கண்டேயன் இறந்துவிடுவானே என்ற சோகத்தால் அல்லலுற்ற மிருகண்டு முனிவர், தன் மகனின் ஆயுள் சிறக்கவேண்டி பல்வேறு தலங்களுக்கும் சென்று வழிபட்டார்.
அவ்வாறு செல்லும் வழியில், கதிராமங்கலத்தில் உலக நலன் வேண்டி அம்பிகை மோன தவம் செய்யும் காட்சியைக் கண்டார். தன் மகன் நீண்ட ஆயுள் பெற்று வாழ அருளும்படி அந்த அன்னையை வேண்டினார்.
அதையேற்ற அம்பிகை, ‘திருக்கடவூர் சென்று அமிர்தகடேஸ்வரரை பூஜித்தால், அவரின் திருவருளால் மார்க்கண்டேயன் சிரஞ்ஜீவியாகத் திகழ்வான்’ என்று வழிகாட்டி அருள்பாலித்தாளாம் வனதுர்கை. அவளின் திருவாக்குப்படியே அனைத்தும் நடந்தது.
இவ்வாறு அடியார்கள் பலருக்கும் அருள்செய்த அம்பிகை, நமக்கு அருள்செய்யவும் காத்திருக்கிறாள். பொதுவாக துர்கையம்மன் ஆலயம் வடக்கு அல்லது தெற்குநோக்கி அமைந்திருக்கும். ஆனால், இங்கே கிழக்குநோக்கி அருள்பாலிக்கிறாள் வனதுர்கையம்மன். கோயிலில் விநாயகர் இல்லை.
மூன்றுநிலை ராஜகோபுரத்துடன் திகழும் இந்த அழகிய ஆலயத்தின் கருவறையில், ஏகதள விமானத்தின் கீழ், தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அன்னை. மேலிரு கரங்களில் சங்கும் சக்கரமும் திகழ, கீழிரு கரங்களில் வலக்கரம் அபயம் காட்ட, இடக்கரம் ஊர்த்துவ ஹஸ்தமாகத் திகழ்கிறது. நாம் திருக்கோயிலை விட்டு நகர மனம் வராத அளவு அழகுப் பொங்க காட்சியளிக்கிறாள் அருள்மிகு வனதுர்கை அம்மன்.
அரக்கர்கள் சிலர், தாங்கள் பெற்ற வரத்தால் மூவுலகங்களையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இவர்களின் தொந்தரவு, மும்மூர்த்தியரையும் விட்டுவைக்கவில்லை.
இந்த அசுரர்களை அழிக்க வேண்டி, மும்மூர்த்திகளும் மற்ற தேவர்களும் ஆதி பராசக்தியின் அருள் வேண்டி மாபெரும் யாகம் ஒன்றை நடத்தினர்.
இந்த யாகத்தின் பலனாகத் தோன்றிய அம்பிகை, தன் அம்சத்துடன் தேவாதிதேவர்கள் அனைவரது அம்சத்தையும் இணைத்து துர்கையாக அவதரித்து, மகிஷன், சும்பன், நிசும்பன், பண்டன் ஆகியோரை வதம் செய்தாள்.
பின்னர் ஏகாந்தியாக இந்த ஆலயத்தில் உலக நன்மைக்காக தாமரை பீடத்தின்மேல் மங்கலம் தரும் மகாலக்ஷ்மியாக அருள்புரிகிறாள் என்கிறார்கள் பக்தர்கள்.
கர்ப்பகிரக நுழைவாசலுக்கு மேற்புறம் சைலபுத்ரி, பிரம்மசாரிணி, சண்டகண்டீ, கூஷ்மாண்டீ, ஸ்கந்தமாலா, சித்திதாயினி, காத்யாயினி, காலராத்ரி, மஹாகவுரி ஆகிய தேவியரின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அம்மையின் எதிரில் சிம்மவாகனம் அமர்ந்த நிலையில் இருக்கிறது