Thursday 18 February 2016

24 ஏகாதசி விரத மகத்துவம்!

ஏகாதசி விரத மகத்துவம்!

ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11-ஆம் நாள் ஏகாதசி. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி என அழைக்கப்படுகின்றன. அந்த நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள் துவாதசியில், பூஜை முடித்த பின்பே காலை உணவு உட்கொள்வது வழக்கம். 

ஒரு வருடத்தில் 24 அல்லது 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசிகளிலும் விரதமிருந்து வழிபடுவோர் பிறவித்துயர் நீங்கி வைகுண்ட பதவி அடைவர் என்பது நம்பிக்கை. வருடம் முழுதும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள், மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டுமாவது விரதம் மேற்கொள்வது சிறப்பான பலன் தரும். 

மூன்று கோடி ஏகாதசிகளில் விரதம் இருந்த பலனைத் தரக்கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி ’முக்கோடி ஏகாதசி’ என்றும் அழைக்கப்படுகிறது. முரன் என்ற அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அவர்கள் ஸ்ரீவிஷ்ணுவிடம் சென்று முறையிட, பகவான் முரனுடன் போரிட்டு அவனது படைகளை அழித்தார். 

பின்னர் பத்ரிகாசிரமம் சென்று அறிதுயில் கொண்டார். அவரைத் தேடிச்சென்ற முரன் பள்ளிகொண்டிருந்த பெருமாளைக் கொல்ல வாளை ஓங்கியபோது, அவர் தன் உடலிலிருந்து ஒரு மோகினியைத் தோற்றுவித்தார். அவள் ஒரு ஹூங்காரம் செய்ததில் முரன் எரிந்து சாம்பலானான். 

முரனை எரித்த மோகினிக்கு ’ஏகாதசி’ என்று பெயர் சூட்டிய திருமால், அன்றைய தினம் ஏகாதசி என வழங்கப்படும் என்றும், அன்று தன்னை வழிபடுவோர்க்கு வைகுண்டப் பதவி அளிப்பதாகவும் கூறி அருளினார். அந்த தினமே வைகுண்ட ஏகாதசி என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 

ஒரு வருடத்தில் வரும் ஏகாதசிகளின் பெயர்களையும் அவற்றை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்களைப் பற்றியும் புராணங்கள் பல செய்திகளைக் கூறுகின்றன. சித்திரை மாத வளர்பிறை ஏகாதசி ’பாபமோஹினி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ’காமதா’ என்றும் அழைக்கப்படுகிறது. 

இத்தினங்களில் விரதமிருப்பவர்களுக்கு விரும்பிய பேறுகள் கிட்டும். வைகாசி மாத வளர்பிறை ஏகாதசி ’வருதினி’ என்றும், தேய்பிறை ஏகாதசி ’மோகினி’ என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த தினங்களில் விரதம் அனுஷ்டிப்பவர், இமயமலை சென்று பத்ரிநாத்தை தரிசித்த பலனைப் பெறுவர். 

ஆனி மாதத்தில் வரும் ’அபரா’, ’நிர்ஜலா’ ஏகாதசிகளில் விரதம் இருந்து வழிபடுவோர் சொர்க்கம் செல்வர். ஆடி மாதத்து ’யோகினி’, ’சயன’ ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டிப்பவர்கள், அன்னதான பலனைப் பெறுவர். ஆவணி மாத வளர்பிறை ஏகாதசியான ’காமிகை’யிலும் தேய்பிறை ஏகாதசியான ’புத்திரதா’விலும் விரதமிருப்போருக்கு மக்கட்பேறு கிட்டும். புரட்டாசி மாத ஏகாதசிகள் ’அஜா’, ’பரிவர்த்தினி’ எனப்படுகின்றன. 

ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி ’இந்திரா’, தேய்பிறை ஏகாதசி ’பராங்குசா’ என அழைக்கப்படுகின்றன. கார்த்திகை மாத ஏகாதசிகள் ’ரமா’, “பிரமோதினி’. மார்கழி மாத ஏகாதசி ’வைகுண்ட ஏகாதசி’ என சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மனிதர்களின் ஓராண்டு தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். அதன்படி மார்கழி மாதம் தேவர்களுக்கு விடியற்காலை நேரம் ஆகும். 

இம்மாதம் மகாவிஷ்ணு அறிதுயிலிலிருந்து விழித்தெழும் மாதம். ஆகவேதான் இந்த மாதத்தில் வரும் ஏகாதசி சிறப்பு பெறுகிறது. மார்கழி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி ’உத்பத்தி’ ஏகாதசி எனப்படுகிறது. தை மாத ஏகாதசிகள் ’சுபலா’, ’புத்ரதா’ எனப்படுகின்றன. பித்ருக்களுக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணம், திவசம் போன்றவற்றைச் செய்யாமல் சாபத்துக்கு ஆளானவர்கள், புத்ரதா விரதம் அனுஷ்டித்தால், பித்ருசாபம் நீங்கி நலம் பெறுவர். 

மாசி மாத வளர்பிறை ஏகாதசியான ’ஜெயா’வில் விரதமிருப்போர் தங்கள் பாவம் நீங்கி நன்மை அடைவர். தேய்பிறை ஏகாதசியான ’ஷட்திலா’ தினத்தில் விரதம் அனுஷ் டிப்பவர்கள் பிரம்மஹத்தி தோஷம் முதலான அனைத்து தோஷங்களும் நீங்கி நலம் அடைவர். பங்குனி மாத ஏகாதசிகள் ’விஜயா’, “விமலகி’ எனப்படுகின்றன. 

ராமபிரான் கடலைக் கடந்து இலங்கைக்குச் செல்லும்முன், விஜயா ஏகாதசி விரதம் அனுஷ்டித்தார் என்பது புராண வரலாறு. தசமியிலும், துவாதசியிலும் ஒரு வேளை உணவு உண்டு, அதிகாலையில் எழுந்து நீராடி, நித்திய கடமைகளை முடித்து, அதன் பிறகு முறைப்படி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். 

அன்று முழுவதும் உணவு கொள்ளாமல் இருப்பது சிறப்பானது. இயலாதவர்கள் நிவேதனம் செய்த பழங்களை சிறிதளவு உண்ணலாம். பகலிலும் அன்று உறங்காமல் பரந்தாமனை பஜனை, நாமஸ்மரணை செய்தும், வழிபாட்டுப் பாடல்களைப் பாராயணம் செய்தும் வழிபட வேண்டும். அடுத்த நாள் துவாதசியன்று அடியார்களுக்கு உணவளித்து அதன் பின்பே உண்ண வேண்டும். 

அம்பரீஷன், ருக்மாங்கதன் போன்ற மன்னர்கள் ஏகாதசி விரதம் அனுஷ்டித்து நற்பலன்களைப் பெற்றனர்.

ஜெய ஜெய சங்கரா 
ஹரே ஹரே சங்கரா 

No comments:

Post a Comment